மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் |
27. புணர்ச்சிப்பத்து |
திருப்பெருந்துறையில் அருளியது |
அத்துவித இலக்கணம் |
எழுசீர் ஆசிரிய விருத்தம் |
சுடர்பொற் குன்றைத் தோளா முத்தை
வாளா தொழும்புகந்து
கடைபட் டேனை ஆண்டுகொண்ட
கருணாலயனைக் கருமால் பிரமன்
தடைபட் டின்னுஞ் சார மாட்டாத்
தன்னைத் தந்தஎன் ஆரமுதைப்
புடைபட் டிருப்ப தென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. |
1 |
ஆற்ற கில்லேன் அடியேன் அரசே
அவனி தலத்தைம் புலனாய
சேற்றி லழுந்தாச் சிந்தை செய்து
சிவனெம் பெருமான் என்றேத்தி
ஊற்று மணல்போல் நெக்குநெக்கு
உள்ளே உருகி ஓலமிட்டுப்
போற்றி நிற்ப தென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. |
2 |
நீண்ட மாலும் அயனும் வெருவ
நீண்ட நெருப்பை விருப்பிலேனை
ஆண்டு கொண்ட என்ஆ ரமுதை
அள்ளூ றுள்ளத் தடியார்முன்
வேண்டுந் தனையும் வாய்விட் டலறி
விரையார் மலர்தூவிப்
பூண்டு கிடப்ப தென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. |
3 |
அல்லிக் கமலத் தயனும் மாலும்
அல்லா தவரும் அமரர் கோனும்
சொல்லிப் பரவும் நாமத் தானைச்
சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை
நிறையின் அமுதை அமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வ தென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. |
4 |
திகழத் திகழும் அடியும் முடியுங்
காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்
அகழப் பறந்துங் காண மாட்டா
அம்மான் இம்மா நிலம்முழுதும்
நிகழப் பணிகொண் டென்னை ஆட்கொண்
டாவா என்ற நீர்மை யெல்லாம்
புகழப் பெறுவ தென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. |
5 |
பரிந்து வந்து மரமா னந்தம்
பண்டே அடியேற் கருள்செய்யப்
பிரிந்து போந்து பெருமா நிலத்தில்
அருமா லுற்றேன் என்றென்று
சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர்
உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப்
புரிந்து நிற்ப தென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. |
6 |
நினையப் பிறருக் கரிய நெருப்பை
நீரைக் காலை நிலனை விசும்பைத்
தனையொப் பாரை யில்லாத் தனியை
நோக்கித் தழைத்துத் தழுத்த கண்டம்
கனையக் கண்ணீர் அருவி பாயக்
கையுங் கூப்பிக் கடிமலரால்
புனையப் பெறுவ தென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. |
7 |
நெக்கு நெக்குள் உருகி உருகி
நின்றும் இருந்துங் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதுந் தொழுதும் வாழ்த்தி
நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச்
செக்கர் போலுந் திருமேனி
திகழ நோக்கிச் சிலிர்சிலிர்த்துப்
புக்கு நிற்ப தென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. |
8 |
தாதாய் மூவே ழுலகுக்குந்
தாயே நாயேன் தனையாண்ட
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே
பெருந்தேன் பில்க எப்போதும்
ஏதா மணியே என்றென் றேத்தி
இரவும் பகலும் எழிலார் பாதப்
போதாய்ந் தணைவ தென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. |
9 |
காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங்
கண்ணார் விசும்பின் விண்ணோர்க் கெல்லாம்
மூப்பாய் மூவா முதலாய் நின்ற
முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பா னேஎம பரமாஎன்று
பாடிப் பாடிப் பணிந்துபாதப்
பூப்போ தணைவ தென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. |
10 |
திருச்சிற்றம்பலம் |